முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா?

கடந்தவாரம் இலங்கை, இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றதை யாவரும் அறிவர். நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கையைத் தோற்கடித்திருக்கிறது. இது பத்தோடு, பதின் ஒன்றாக ஒரு சாதாரண கிரிக்கெட் போட்டி செய்தியாக வெளிவந்திருக்க வேண்டிய விடையம்,


ஆனால் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. போட்டியில் இந்திய வீரர் சேவக் 99 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஒரு ரன்னை சேவக் எடுத்து விட்டால் இந்திய அணி வெற்றி பெறுவதோடு, சேவக் தனது 13வது சதத்தையும்(100 ரன்) அடித்திருக்கலாம். அது அப்போது இருந்த நிலை.

ஆனால் இறுதி ஓவரை வீசிய இலங்கை அணி சுழற்பந்து வீரர் ரந்திவ் வேண்டுமென்றே “நோ பால்” வீசினார். இதையடுத்து கிடைத்த 1 ரண்ணில் இந்தியா வெற்றி பெற்றாலும், சேவக் சதமடிக்கவில்லை.

இதுதான் இப்போது இந்தியாவின் அதி முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் ரணதுங்கா இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நன்னடத்தைக்காக ஐ.சி.சியிடம் மூன்று முறை விருது வாங்கிய தங்கள் அணியா இப்படி நடந்திருக்கிறது என்று அவர் அங்கலாய்த்துள்ளார். இலங்கை அணித் தலைவர் சங்ககராவும் இந்த செயலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பாளர்களும் இந்த விவாகரத்தை முடித்துக் கொள்ளலாமென்று பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்தியாவின் ஊடகங்கள் இதை முடிப்பதாக இல்லை. இது இந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை போல மாற்றி வருகின்றனர். எல்லா செய்தி சானல்களிலும் இது பெரும் விவதாகமாக காட்டப்படுகிறது. தினசரிகளின் விளையாட்டு செய்திகளில் இதுவே கருப்பொருளாக பேசப்படுவதோடு, முக்கிய பிரச்சனையாகவும் உள்ளது. இதனிடையே சயிக்கிள் கப்பில், சங்ககரா இந்திய இரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். பிறகு ஐ.பி.எல்லில் விளையாடும் வாய்ப்பும், வருமானமும் முக்கியம் என்ற விதத்தில் அவரது கவலை இருந்திருக்கும் என்பது எவரும் அறிவர். இந்திய ரசிகர்களுக்கோ சேவக் சதமடிப்பது ஒரு ரன்னில் போய்விட்டதே என்று பெரும் கவலை.

பிரபல இணையங்களில் உள்ள பின்னூட்டங்களில், வாசகர்கள் பலர் இதை வைத்து சிங்களவன் என்றால் இப்படித்தான் அழுகுணி ஆட்டம் ஆடுவான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்காலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட சேவக் கோட்டை விட்ட ஒரு ரன் என்ற எண்ணிக்கை முக்கியமா ? ஈழத் தமிழ் மக்களை வதைமுகாமில் அடைத்து வைத்திருப்பதில் இருந்து புரியாத சிங்கள இனவெறி, இந்த ஒரு ரன் பிரச்சினையில் புரிந்து கொள்வதாகச் சொல்வது என்ன நியாயம் ?

விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றிய ராஜபக்சேவுக்கு இந்தியா எல்லா விதங்களிலும் உதவி செய்திருக்கிறது. அதில் போகாத இந்திய மானமா இந்த ஒரு ரன்னில் போய்விடப்போகிறது?

ஈழத்தின் மீதான இறுதிப்போரை அதன் அழிவைப் பற்றியெல்லாம் தேசிய விவாதம் நடத்தாத இந்திய ஊடகங்கள் இந்த ஒரு ரன்/நோ பால் பிரச்சினையை பற்றி மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்தியாவின் கிரிக்கெட் இரசிகனை விட ஈழத்தமிழர்களின் உயிர் மிகவும் மலிவான ஒன்றா ?

ஈழத்தை அழிக்க சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு ஆதரவளித்ததற்கும், இந்த ஒரு ரன் பிரச்சினைக்கும் பின்னணியாக இருப்பது இந்திய முதலாளிகளின் நலன்தான். ஒன்றுபட்ட இலங்கை என்பதே இந்திய தரகு முதலாளிகளின் தேவை என்றால், கிரிக்கெட்டை வைத்து நுகர்பொருள் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கும் இந்திய முதாளிகளுக்கு சேவக் ஒரு ரன்னை இழந்ததும் அதனால் இரசிகன் அடையும் எரிச்சலை தணிப்பதும் அவசியமாக இருக்கிறது. ஏன் எனில் சேவக்கை வைத்து வியாபரம் நடத்தவேண்டுமே ..

இந்திய கிரிக்கெட் சந்தையின் தயவில் தான் வாழ முடியும் என்ற நிலையிலிருக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை பெரிது படுத்தாமல் மன்னிப்பு கேட்டு முடிக்க நினைக்கிறது. ஐ.பி.எல் மூலம் பெரும் வருமானத்தை ஈட்டும் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் இந்த மன்னிப்பு தேவையாக இருக்கிறது. அரசியலும் விளாயட்டும் அதன் பொருளாதார நலன்களிலிருந்தே தீர்மானக்கப்படும் என்பதற்கு இதை விட எடுப்பான சான்று வேறு ஏது?

இருப்பினும் ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி கிரிக்கெட் இப்படி பேசு பொருளாக இருப்பது இந்தியாவின் இழிந்த நிலையையே காட்டுகிறது. அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை விட கிரிக்கெட் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பது எந்த விதத்திலும் நல்லதல்ல.



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP