3- மூணு திரை விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்

தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்

பிஆர்ஓ: ரியாஸ்



பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. என்பதுதான் 3 ரிலீசுக்கு முன்பு வரை இருந்த பேச்சு.

ஆனால் ஐஸ்வர்யா தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன படங்களின் சாயல் லேசாகத் தெரிந்தாலும் (செல்வராகவன் உதவியாளர் அல்லவா... இருக்கத்தானே செய்யும்!), இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் சோதித்தாலும் படத்தைப் பார்க்க முடிகிறது!

இன்னொன்று, அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கே உரிய அமெச்சூர்த்தனம், பெண் இயக்குநர்கள் வழக்கமாக செய்யும் தவறுகள் எதுவும் இல்லாமல், ஒரு பக்குவமான காட்சிப்படுத்தலை 3-ல் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து வரவேற்கலாம்!

ஒரு இளைஞனின் மூன்று கட்ட வாழ்க்கை நிலைகளின் சம்பவங்களின் தொகுப்பு இந்தப் படம்.

ப்ளஸ்டூ படிக்கும் தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் (ரெண்டு பேருமே மாணவ வேடம் அத்தனை கச்சிதம்). ரொம்ப அழகான காதல். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகுதான் தனுஷுக்கு சோதனை ஆரம்பமாகிறது. ஒரு ஆள் பல பரிமாணமெடுக்கும் மனநோய். இதனால் பல பிரச்சினைகள். அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது மீதிக் கதை.

எல்லோரும் ஏகத்துக்கும் ஏற்றிவிட்ட கொலவெறி பாடலைத் தாண்டி இந்தப் படம் மனதில் நிற்பதற்குக் காரணம், இளமை துள்ளும் அந்த முதல் பாதி.

ட்யூஷன் சென்டரில் ஸ்ருதியைக் கவர தனுஷ் செய்யும் முயற்சிகள் செம. தனுஷ் - ஸ்ருதி திருமணம் நடக்கும் இடம், அந்த திருமணத்தை எதிர்க்கும் ஸ்ருதி பெற்றோரிடம் தனுஷ் பேசும் வசனங்கள், அதற்கு ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் அடுத்த ரியாக்ஷன் போன்றவை சற்றும் எதிர்பாராத திருப்பக் காட்சிகள்.

அதென்னமோ தொடர்ந்து தனுஷு்ககு சைக்கோ கேரக்டர்களாக அமைகின்றன. இது எதேச்சையானதா திட்டமிட்டதா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிப்பில் தனுஷ் மிரட்டியிருக்கிறார். இதுவரை பார்க்காத வேறுமுகம் அது. அதிலும் மனைவிக்குத் தெரியாமல் தன் நோயை மறைக்க அவர் படும் பாடு... வாவ்!

நடிப்பா இயக்கமா... யார் பெஸ்ட் பார்ப்போம் என கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய போட்டியே நடந்திருக்கும் போல!

ஏழாம் அறிவில் எல்கேஜி லெவலுக்கு இருந்த ஸ்ருதி ஹாஸன் நடிப்பு இந்தப் படத்தில் டிகிரி வாங்கிவிட்டது. இந்தப் பொண்ணு இந்த அளவு நடிக்குமா என கேட்க வைக்கிறது. ஆனால் அவர் அழ ஆரம்பித்தால் நாம் தலை கவிழ வேண்டியுள்ளது. அதைக் கொஞ்சம் கவனியுங்கள் அம்மணி!

இயக்குபவர் மனைவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அநியாயத்துக்கு ஸ்ருதியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் தனுஷ். இதான் அந்த கெமிஸ்ட்ரியா!

சந்தானத்துக்கு போட்டியாக வந்துவிடுவார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். சுந்தர் ராமு, பிரபு, பானுப்ரியா, ரோகிணி என எல்லோருமே படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர்.


இடைவேளை வரை அழகாகப் பயணிக்கும் படம், தனுஷ் மனநோயாளியாக மாறியதும் பார்வையாளர்களைப் பொறுமையிழக்க வைக்கிறது. தனுஷின் இந்த மனநோய் அவருக்கு மட்டும் தெரிந்து, மற்ற யாருக்குமே தெரியாமல் போவது எப்படி என்று புரியவில்லை (நண்பன் ஒருவனைத் தவிர).

அடுத்தடுத்த படங்களில் மனநோயாளியாகவே தனுஷைப் பார்க்க நமக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது!

அனிருத்தின் இசையில் எல்லாப் பாடல்களுமே கேட்கும்படி உள்ளது. உலகமகா கொலவெறிப் பாட்டை இப்படி சுமாராகத்தான் எடுத்திருப்பார்கள் என நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.

வேல்ராஜின் கேமரா அருமை. கோலா பாஸ்கர் கத்தரி இடைவேளைக்குப் பிறகு கோளாறாகிவிட்டது போலிருக்கிறது.

ரஜினியின் பொண்ணு என்ற சிறப்புப் பட்டம் இனி ஐஸ்வர்யாவுக்கு தேவையில்லை. கம்பீரமாக 'நான் இயக்குநர் ஐஸ்வர்யா' என்று சொல்லிக் கொள்ளலாம்!

3 review , 3 movie review in tamil , moonu review



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP