விரைவில் யாழ்ப்பாணத்தில் விஜய் அன்டனி இசைப்பள்ளி!


"யாழ்ப்பாணத்தில் விஜய் அன்டனி மியூசிக் ஸ்கூல் ஒன்றை அமைக்க உத்தேசித்துள்ளேன். இது தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்து பேசி அனுமதி பெற இருக்கின்றேன். கர்நாடக இசை மட்டுமன்றி, இசையில் தொழில்நுட்பத்தையும் சேர்த்து பயிற்சி அளிப்பதே என் நோக்கம்" என்று கூறினார் பிரபல இந்திய திரைப்படப் பின்னணி இசையமைப்பாளர் விஜய் அன்டனி.கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில், விஜய் அன்டனியின் இன்னிசை நிகழ்வு நடைபெற்றது. நாமல் ராஜபக்ஷவின் 'இளைஞர்களுக்கு நாளை' திட்டத்தின் ஓர் அம்சமாக இந்த இன்னிசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்னிசை நிகழ்வை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய விஜய் அன்டனி, தாயகம் திரும்புமுன் பத்திரிகை ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர்,

"யாழ்ப்பாணத் தமிழ் வித்தியாசமானது. நாம் பேசும் தமிழைவிட தெளிவானது. நாம் சற்று நீளமாக, ஆங்கிலம் கலந்த தமிழைப் பேசுகின்றோம். ஆனால் யாழ்ப்பாணத் தமிழ் அப்படியல்ல, அவர்கள் பேசும் தமிழ் சிறப்பாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வைக் காண சுமார் 2 லட்சம் பேர் அந்த அரங்கத்தில் கூடியிருந்தனர். அங்கு அமர்வதற்கு நாற்காலிகள் கூட இருக்கவில்லை. நின்றபடியே அவர்கள் இசையை ரசித்தார்கள். இது மனதில் நெகிழ்வை ஏற்படுத்தியது.

அங்கு மேடையில் வைத்து ஒரு விடயத்தைக் கூற இருந்தேன். ஆனால் கூற கிடைக்கவில்லை. அதாவது யாழ்ப்பாணத்தில் விரைவில் 'விஜய் அன்டனி மியூசிக் ஸ்கூல்' ஒன்றை அமைக்க உத்தேசித்துள்ளேன். இது தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்து பேசி அனுமதி பெற இருக்கின்றேன். கர்நாடக இசை மட்டுமன்றி, இசையில் தொழில்நுட்பத்தையும் சேர்த்து பயிற்சி அளிப்பதே என் நோக்கம்.

நான் யாழ்ப்பாணம் பயணித்த பாதையில் ஏழெட்டு கோவில்கள் இருக்கக் கண்டேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் தெய்வீகமான ஓரிடமாகவே எனக்கு எண்ணத் தோன்றுகின்றது.

யாழ்ப்பாணம் அபிவிருத்தியடைந்து நல்லதொரு சூழ்நிலை விரைவில் ஏற்பட வேண்டும். ஏற்படும் என்று நம்புகின்றேன்" 

என்றார்.


Thanks www.sankamam.com 



Post Comment

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP